பாதியாய் நீயும்?
October 22, 2014
விண்மீன் எண்ணவே
விரல்கள் போதவில்லை
விழிமூடிக் கொண்டேனே!
நடைபாதை வழியிலே
நிழல்கள் இல்லையே
ஒருஓரம் நின்றேனே!
இளங்காற்று வீசையிலே
உடனிங்கே யாருமில்லை
ஒளிந்து கொண்டேனே!
வானவில் வரைகையில்
வண்ணங்கள் இல்லையே
எண்ணங்கள் விட்டேனே!
பறிக்கும் பூக்கள்
பயனின்றி கிடக்குமென
பறிக்காமல் வந்தேனே!
கனவுகள் பலஇருந்தும்
நினைவிலே ஏதுமில்லை
கண்கள் விழித்தேனே!
மழையிலே நனைகையில்
மனம்அங்கே கரைந்ததே
மறைந்து நின்றேனே!
வானவில் வண்ணமாய்
நடைபாதை நிழலாய்
கனவுகளில் நனவாய்
மின்னும் விண்மீனாய்
காற்றின் இதமாய்
மழையிலே துளியாய்
பாதியாய் இருக்கும்
எந்தன் வாழ்கையில்
பாதியாய் நீயும்?